தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தறிகெட்டுச் சென்று இரண்டு விபத்துக்களை ஏற்படுத்திய லாரி!

வேலூர்: சார்னாம்பேடு பகுதியில் தறிகெட்டு ஓடிய லாரி (சுமையுந்து), இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Apr 21, 2019, 9:15 PM IST

விபத்துக்குள்ளான லாரி

வேலூர் சார்னாம்பேடு பகுதியில் மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு இப்பள்ளி அருகே சுமையுந்து ஒன்று மின்னல் வேகத்தில் வந்துள்ளது. அப்போது சுமையுந்தின் வேகத்தைக் குறைக்க ஓட்டுநர் முயன்றபோது, பிரேக் பிடிக்காமல் போகக், கட்டுப்பாட்டை இழந்த முன்னால் சென்ற சுமைதானி(லோடு ஆட்டோ) மீது மோதியுள்ளது.

இதில், சுமைதானி(லோடு ஆட்டோ) தலைகுப்புற கவிழ்ந்தது. பின்னர் இதனைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் சாமர்த்தியமாக சுமையுந்தைச் சாலையின் ஓரமாகத் திருப்ப முயன்றார். அப்போது, இடது புறமாக வந்துகொண்டிருந்த வாகனம் மீது மோதியது. இதில், அந்த வாகனத்துக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த சுமையுந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையோரத்தில் உள்ள சுவர் மீது மோதி நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

சுமையுந்து மோதிய சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அடிப்பட்ட வாகனத்தில் இருந்தவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்ற பதற்றத்துடன் ஓடிச்சென்று அவர்களை மீட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திக்குள்ளான அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் இதுபோன்று பல முறை விபத்து ஏற்படுகிறது என்றும், இங்குப் போடப்பட்டிருக்கும் சாலை பாதுகாப்பானதாக இல்லை என்பதால், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details