வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த கோரப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் மகன் அருண்குமார். இவர் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
லாரியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு இதையடுத்து எதிரே வந்த லாரி, அருண்குமார் மீது மோதியதில் பின் பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு சென்ற லத்தேரி காவல் துறையினர் மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவன் அருண்குமார் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தனது கல்லூரி புத்தக பையை தோளில் மாட்டாமல் வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது வைத்து சென்றுள்ளார். அப்போது பை நழுவி வண்டியின் ஹேண்டிலில் மாட்டியுள்ளது. அதைத் தடுக்க முற்பட்டபோது மாணவன் நிலைதடுமாறி கீழே விழுந்து எதிரே வந்த லாரியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி