வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், ' மத்திய அரசு வாகனங்களுக்கு காப்பீடு செய்வதில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டுவர முடிவு செய்து விரைவில் அதனை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இவை நடைமுறைக்கு வந்தால் லாரி தொழில் மட்டும் இன்றி இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர் உள்பட அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
வாகனக் காப்பீட்டில் மாற்றங்கள் செய்யப்பட உள்ள சரத்துகளை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு வாகனம் விபத்துக்குள்ளானால் முதல் தகவல் காப்பீட்டு நிறுவனத்திற்கு 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.