வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குள்பட்ட பெரியகரம் பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஆறு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் ஊராட்சி செயலாளரிடமும் பலமுறைக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இப்பகுதி மக்கள் சமீபத்தில் பெய்த மழைநீரைப் பிடித்துவைத்து குடித்துவருவதாகவும் இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வசதி படைத்தவர்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். ஏழை மக்கள் எவ்வாறு வாங்க முடியும் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
'நாங்கள் தண்ணீர்தான் கேட்கிறோம். எங்களது கோரிக்கையை ஏற்று விரைவில் தண்ணீர் வழங்க வேண்டும்' எனக்கூறி 200-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திருப்பத்தூர்-பெங்களூரு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்கப்படும் எனக் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க : வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்... காங்கிரஸ் வேட்பாளரைக் கண்டித்து சாலை மறியல்!