குளம்போல் தேங்கிய மழைநீர் - சாலை, கழிவுநீர்க் கால்வாய் வசதி செய்து தர கோரிக்கை வேலூர்:வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் கிராமத்தில், லட்சுமி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அப்பகுதியில் முறையான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில், அண்மையில் பெய்த மழையால் அப்பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. குடியிருப்புகளைச் சுற்றியுள்ள காலி இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதாகவும், கொசு உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும், பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
மழைக் காலங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைவரும் அச்சத்துடன் வசிக்கும் சூழல் ஏற்படுவதாகவும், வீட்டை விட்டே வெளியேற முடியாத நிலை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஒரு மணி நேரம் மழை பெய்தால் கூட அப்பகுதி முழுவதும் குளம் போல காட்சியளிக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். இது குறித்து பல முறை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தங்கள் கிராமத்தில் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தரவில்லை என்றால், தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என்றும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: Yellow Fever: சூடானில் இருந்து வருபவர்களைச் சோதனை செய்ய விமான நிலையங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு