வேலூர் சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்த காதர் (21) என்பவர் தனது நண்பர்களுடன், சித்தேரியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக காதர் 150 அடி ஆழம் கொண்ட கல்குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதனையடுத்து நேற்று முதல் வேலூர் தீயணைப்புத் துறையினர் மாலை வரை குவாரியில் உடலைத் தேடியும் கிடைக்காததால், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவி நாடப்பட்டது.
இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து இன்று காலை வந்த 20 பேர் கொண்ட தேசிய மீட்புக் குழுவினர் இரண்டாவது நாளாக காதர் உடலை குவாரியில் தேடினர். இந்நிலையில், மதியம் 12.30 மணி அளவில், ஒரு நாள்களுக்குப் பிறகு நீரில் மூழ்கியிருந்த காதரின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, அரியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த காதர், கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து ஆறு மாத கைக்குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.