வேலூர்:குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், குப்பம்மாள் (55). இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் குடும்பச்சூழல் காரணமாக தனது இரண்டு மகன்களுடன் பேரணாம்பட்டுப் பகுதியில் குடியேறி வசித்து வந்துள்ளார்.
இவர்கள் தினந்தோறும் பேரணாம்பட்டுப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து அவற்றை பழைய பொருள்கள் வாங்கும் கடைகளில் விற்று சாலையோரத்தில் தங்கி, தங்களது பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் குப்பம்மாளின் இரண்டாவது மகன் தினேஷ் (30) என்பவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஏப்.14) மாலை 6 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய பணம் இல்லாததால், அவரது குடும்பத்தார் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர், பேர்ணாம்பட்டு மஸ்ஜித் சேவை குழுவுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்து தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் இதனையடுத்து பேர்ணாம்பட்டு மஸ்ஜித் சேவைக்குழுவினர் இறந்து கிடந்த கூலித்தொழிலாளி தினேஷ் என்பவரை இந்து முறைப்படி பேரணாம்பட்டு ஆயக்கார தெருவிலுள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர். மாற்று மத சகோதரர்களை இஸ்லாமியர்கள் இந்து மத முறைப்படி நல்லடக்கம் செய்த மத நல்லிணக்க செயல் பொதுமக்கள் தரப்பில் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:சென்னை: தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனை