தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Vellore Traffic: புதை சாக்கடை திட்டப்பணிகளால் நெரிசல் : பணிகளை இரவில் மேற்கொள்ள வலியுறுத்தல்

வேலூரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப்பணிகளால் ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வேலூரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப்பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
வேலூரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப்பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

By

Published : Jun 3, 2023, 6:35 PM IST

வேலூர்:வளர்ச்சி திட்டப்பணிகளை முன்னிட்டு வேலூரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப்பணிகளால் ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிவுறு நகர் திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில், மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும், பழைய நகராட்சி எல்லைக்குள் விடுபட்ட பகுதிகளிலும் புதை சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் அங்கு சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதேபோல் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் மற்றும் ஆற்காடு சாலையையொட்டியுள்ள காகிதப்பட்டறை, சாரதி நகர், எல்ஐசி நகர் பகுதிகளிலும் புதை சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் பிரதான குழாய் இணைப்பு, ஆற்காடு சாலையில் வருவதால் ஆற்காடு சாலையில் புதை சாக்கடை அமைக்கும் பணியும், அங்குள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகளும் ஒருசேர நடைபெற்று வருகிறது. இப்பணிகளால் சைதாப்பேட்டை முருகன் கோயில் முதல் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் வரை சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

பிரதான சாலைகளில் இப்படி வளர்ச்சித் திட்டப் பணிகள் பகல் நேரங்களில் நடந்து கொண்டிருப்பதனால் பள்ளி மற்றும் வேலை செல்வேருக்கு போக்குவரத்து இடையூறாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. இதனிடையே அடுத்தகட்டமாக முருகன் கோயில் அருகே மீண்டும் காலையில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

இதன் காரணமாக, சாலையில் வாகனங்கள் எதிர் எதிரே வருவதால் காகிதப்பட்டறையிலிருந்து ஆற்காடு சாலை வரை என சுற்றுப் பகுதி முழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் தொடரும் இத்தகைய போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திட்டப்பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும் என்றும், பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதை சாக்கடை திட்டப்பணி நடைபெறுவதால் காகிதப்பட்டறை பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரமாக மக்கள் அவதிப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் இடறுபாடு இல்லாமல் விரைந்து இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:video:அசுர வேகத்தில் சரக்கு ஆட்டோ மீது மோதிய கார் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details