தமிழ்நாட்டில் 'கரோனா வைரஸ்' பரவலை தடுக்க அரசு பல்வேறுகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்கொண்டுவருகிறது. அந்த வகையில், அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து வைரஸ் பரவலை தடுக்க, வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு, ஆந்திர எல்லைப்பகுதிகளான காட்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, உள்ளிட்ட 13 இடங்களில் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் குழுவில் சுகாதார துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து வருகை தரும் வாகனங்களுக்கு முழுவதுமாக பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது. மேலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் லாரி, கார், வேன் ஓட்டுநர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.
பரிசோதனையில் கரோனா அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். இதுவரையில் வேலூர் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லாத நிலையிலும், முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு ஆந்திர எல்லையில் உள்ள மொத்தம் 20 திரையரங்குகள் 31ஆம் தேதிவரை மூடப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் மருத்துவக் குழுவினர் வேலூரில் மிகவும் பிரபலமான எருதுவிடும் திருவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தடை விதித்துள்ளார். மேலும் பொது மக்களின் பாதுகாப்புக்கு தேவையான முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் குறைந்த விலையில் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா பீதி: கீழடி தொல்பொருள் கண்காட்சியகம் மார்ச் 31 வரை மூடல்!