தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 30 லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 3,456 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 183 வாக்கு மையங்களில் உள்ள 347 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள் வருகை
வேலூர்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ வீரர்கள் நேரில் சென்று கண்காணிக்க உள்ளதாகவும், பறக்கும்படை அதிகாரிகளுடன் சேர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தேர்தல் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
எனவே, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 382 தேர்தல் நுண்ணறிவு பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர். வாக்குப்பதிவின் போது பொதுமக்கள் எந்த இடையூறும் இன்றி பாதுகாப்பான முறையில் வாக்களித்துச் செல்ல, துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக வேலூருக்கு வந்தடைந்தனர். அவர்கள் ஒவ்வொரு குழுக்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர். இவர்கள் நாளை முதல் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.