தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 12, 2019, 7:11 PM IST

ETV Bharat / state

தொடர் கொள்ளை சம்பவங்கள் - பொதுமக்கள் அச்சத்தை போக்க காவல் துறை முயற்சி

வேலூர்: திருப்பத்தூர் அருகே தொடர் திருட்டால் அச்சமடைந்திருக்கும் பொதுமக்கள், திருட்டை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொடர் கொள்ளை சம்பவங்கள் - பொதுமக்கள் அச்சத்தை போக்க காவல்துறை முயற்சி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராணுவ வீரர் பார்த்திபன் வீட்டில் 1 லட்சம் ரூபாய் பணம், 20 பவுன் தங்க ஆபரணங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

இதனையடுத்து இரு நாட்கள் கழித்து அதே தெருவைச் சேர்ந்த முரளி என்பவரது வீட்டில் ஒரு இருசக்கர வாகனம் திருடுபோனது. அதனைத்தொடர்ந்து மீண்டும் அதே தெருவில் உள்ள வேலு என்பவர் வீட்டில் திருட முயற்சித்த போது கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த கொள்ளையர்கள் குனிச்சி கூட்டு ரோட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது வீட்டுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் திருட வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்க முயற்சித்தபோது பக்கத்து வீட்டிலிருந்த இருந்த வளர்ப்பு நாய் (சீரா) கொள்ளையர்களை விரட்டிச் சென்றுள்ளது. இதையடுத்து தங்களை விரட்டி வந்த நாய்க்கு கொள்ளையர்கள் விஷ ஊசி செலுத்தி கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த தொடர் திருட்டு சம்பவம் லக்கிநாயக்கன்பட்டி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தங்கள் பகுதிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட லக்கிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பத்தூரிலுள்ள டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எங்கள் பகுதியில் நடக்கும் தொடர் திருட்டை தடுக்க காவல் துறை தவறிவிட்டதாக கூறி டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த டிஎஸ்பி தங்கவேலிடம், தங்களது கிராமத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட அவர், உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தொடர் கொள்ளை சம்பவங்கள் - பொதுமக்கள் அச்சத்தை போக்க காவல்துறை முயற்சி

மேலும், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை காவலர்கள் வாகனத்தில் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள் எனவும், திருட்டை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details