வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆம்பூரில் பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " வேலூர் தேர்தல் பொதுத்தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெற்றிருந்தால் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றிருப்பார். வேண்டுமென்றே இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
பாலாறு, கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திராவில் 33 கி.மீ. தொலைவு பயணிக்கிறது. இதில், ஆந்திர அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது.
இதைத்தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியானால் எதற்காக இந்த அரசு இருக்க வேண்டும்?
தற்போது தமிழ்நாட்டில் அன்றாட படுகொலைகள் நடைபெறுகின்றன. மேலும், ஆணவப் படுகொலைக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் அலட்சிய கண்ணோட்டத்தோடு முதலமைச்சர் பதிலளிக்கிறார் .
அதுமட்டுமல்லாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. முத்தலாக் சட்டத்திற்கு ஓ.பி.எஸ் மகன் ஆதரித்துப் பேசுகிறார். ஆனால் ராஜ்ய சபாவில் நவநீதகிருஷ்ணன் எதிர்த்துப் பேசுகிறார், என்றார்.