தமிழ்நாடு

tamil nadu

பேருந்து சக்கரத்தில் சிக்கி எலக்ட்ரீசியன் பலி - காளையால் நடந்த கோர விபத்து!

By

Published : Feb 25, 2023, 7:14 AM IST

சாலையின் குறுக்கே வந்த காளையினால் தடுமாறி கீழே விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறிச் சென்ற சம்பவத்தில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

பேருந்து சக்கரத்தில் சிக்கி எலக்ட்ரீசியன் பலி

வேலூர்:சத்துவாச்சாரி கானார் தெருவை சேர்ந்தவர் ராமு(32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும் பெண் குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு (பிப்.24) கடைக்கு செல்வதாக ராமு கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆற்காடு சாலையில் வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, காகிதப்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் கட்டப்பட்டிருந்த காளைமாடு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத ராமு மாட்டின் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

நிலைதடுமாறி ராமு கீழே விழுந்த கண்ணிமைக்கும் நேரத்தில் விளாப்பாக்கம் செல்வதற்காக பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறிச் சென்றது. பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய ராமு பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் உயிரிழந்து கிடந்த ராமுவின் உடலை தழுவி அவரது தாய் மற்றும் மனைவி கதறி அழுத சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் வடக்கு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காகிதப்பட்டறை பகுதியில் சுமார் 20-லிருந்து 30 மாடுகள் வரை சுற்றித் திரிவதாகவும், அவ்வாறு சுற்றும் மாடுகளினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தனர். இதனால், பலமுறை சாலை விபத்துகள் ஏற்பட்டதோடு, தற்போது ஒருவரின் உயிர் பரிதாபமாக போய்விட்டது என்றும் வேதனையுடன் கூறினார்.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இனியாவது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் தெரிவித்தனர். உயிரிழந்த ராமுவின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். ராமுவை மட்டுமே நம்பியிருந்த 3 பிள்ளைகள் உள்ள அவரது குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'எந்த ஒரு உபகரணங்களும் கொடுக்காமல் வேலை வாங்குகின்றனர்' - தூய்மைப்பணியாளர்களுக்கு நேர்ந்த அவலம்

ABOUT THE AUTHOR

...view details