தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொடி போட்டு 5 சவரன் நகை கொள்ளை: குற்றவாளிகளுக்கு காவல் துறை வலைவீச்சு!

வேலூர் அருகே பெண்ணிடமிருந்து நூதன முறையில் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

அடையாளம் தெரியாத நபருக்கு காவல்துறை வலைவீச்சு
அடையாளம் தெரியாத நபருக்கு காவல்துறை வலைவீச்சு

By

Published : Jan 7, 2022, 3:41 PM IST

Updated : Jan 7, 2022, 7:46 PM IST

வேலூர்:கொணவட்டம் பெரிய மசூதி, கரீம் சாகிபு தெருவைச் சேர்ந்தவர்கள் ஜாபர் கான், ஆயிஷா (29) தம்பதியர். நேற்று (ஜனவரி 6) ஆயிஷா வீட்டில் அவரது தாய், மகனுடன் இருந்துள்ளார்.

அப்பொழுது காலை 9.30 மணி அளவில் கொட்டடித்துக்கொண்டு குறி சொல்வது போன்று ஒரு அடையாளம் தெரியாத நபர் வந்துள்ளார். அவர் ஆயிஷாவின் இரண்டாவது மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் இதனைப் போக்குவதற்கு ஆயிஷாவின் கையில் உள்ள நகைகளைக் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன ஆயிஷா தான் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார்.

அவரோ மந்திரம் போடுவதுபோல நகைகளை வாங்கிக் கொண்டு ஒரு மண் சட்டியில் போட்டு மந்திரம் ஓதி உள்ளார். தொடர்ந்து அவர் கையில் வைத்திருந்த விபூதி போன்ற பொடியை எடுத்து ஊதி உள்ளார்.

இதனையடுத்து பொடியை ஊதிய சிறிது நேரத்தில் ஆயிஷாவும், அருகிலிருந்த அவரது தாயார், நான்கு வயது மகன் ஆகியோர் மயங்கி விழுந்துள்ளனர்.

அதன்பின் சுமார் அரை மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, ஆயிஷாவின் நகைகள் அனைத்தையும் அந்த அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

பின்னர் உடனடியாக தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆயிஷா, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுபோன்று மந்திரம் போடுவதாகக் கூறி நகைகளைக் கேட்டால் யாரும் ஏமாந்து கொடுத்துவிட வேண்டாம் என்று காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது - அமைச்சர் சக்கரபாணி

Last Updated : Jan 7, 2022, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details