திருச்சி: கரோனா நிவாரண நிதியாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வரகனேரி ரேஷன் கடையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "முதல் தவணை கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
இரண்டாவது தவணையும் முழுமையாக வழங்கப்படும். 12ஆம் வகுப்பிற்கான தேர்வு நிச்சயம் நடைபெறும். இதுகுறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் காணொலி மூலம் கருத்து கேட்டு வருகிறோம். அனைவருமே 12ஆம் வகுப்புத் தேர்வை உறுதியாக நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
கரோனா நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்றைய நிலையில் தேர்வு என்பது அவசியம். ஆனால், கரோனா தொற்று தாக்கத்தின் விளைவாக, இனிவரும் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனால், நிச்சயம் 12ஆம் வகுப்புக்கான தேர்வு நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். ஏனென்றால் 12ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிக்குள் நுழையும்போது மாணவ, மாணவிகள் எந்தத் துறையை தேர்ந்து எடுப்பார்கள் என்பது மிக முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது.
இங்கு நல்ல தேர்ச்சி பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒருவேளை அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தால், அந்த அறிவிப்பு மாணவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரும். மாணவர்கள் அரசைப் பாராட்டலாம். ஆனால், அது எங்களுக்குத் தேவை இல்லை. தேர்வு நடத்தி அதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைந்து நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம்" என்றார்.
இதையும் படிங்க:12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது கட்டாயம் - மாணவர் பெற்றோர் அமைப்பு வலியுறுத்தல்!