"சதுரங்க வேட்டை" திரைப்பட பாணியில் எம்எல்எம் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதில் பெரும்பாலான நிறுவனங்கள் பணத்தை வசூல் செய்துவிட்டு மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்ஃபின் என்ற எம்எல்எம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எம்எல்எம் மூலம் பாத்திரம், புடவை, மளிகைப் பொருள்கள், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்நிறுவனம் பணம் இரட்டிப்பு செய்வதாகவும் கூறி வசூல் செய்து வருகின்றனர். இத்தகைய தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்வதாக இந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்கள் போலி கையெழுத்திட்ட காசோலை கொடுத்து பலரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கீழாநிலை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அவருக்கு உறுதி அளித்தபடி பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (7ஆம் தேதி) மாலை பணத்தை திருப்பி கேட்ட போது ராஜ்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
அதோடு பணத்தையும் திருப்பிக் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராஜ்குமார் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அந்நிறுவனத்தின் அதிபர்களான ராஜா, அவரது சகோதரர் ரமேஷ் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பிரபாகரன், பால்ராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது சட்டப்பிரிவு 147, 148, 294 (பி), 323, 506 (2) 420 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ராஜா சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இவரது சகோதரரான ரமேஷ் குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அச்சு ஊடக பிரிவு மாநில செயலாளராக பதவி வகிக்கிறார்.
மோசடி வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக ராஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக பரவலாகப் பேசப்பட்டது. அவரை கட்சியில் சேர்க்க திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைந்துள்ளார். இணைந்த ஒரு சில நாட்களிலேயே அவர் மீது கொலை மிரட்டல்,மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீனவர்கள் விவகாரம்: பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்!