திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தில் ஆச்சிராமவள்ளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், கீழ அன்பில், கோட்டைமேடு, ஜெங்கமநாதபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, படுகை, பராமங்கலம் ஆகிய ஏழு கிராமங்களுக்குச் சொந்தமாகும்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது அம்மன் வீதி உலா, கிடா வெட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில் கடைசியாக இந்த திருவிழா 1993ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதி உலா செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக திருவிழா நிறுத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. பழைய முறைப்படியே திருவிழா நடைபெறவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து 27 ஆண்டுகள் கழித்து தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.
இதற்காக வருவாய் துறை அலுவலர்கள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதிக்குள் அம்மனை அழைத்துச் செல்லாமல் பொது இடத்தில் வைத்து அனைவரும் வழிபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் திருவிழா தொடங்கி நடைபெற்றது.