ஜெய் சிவசேனா மற்றும் பரிவார அமைப்புகளின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக். 7) நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் குமாரராஜா, மாநில பொருளாளர் செந்தில், பாரதிய இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் முத்துக்குமார், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அபிஷேக், மாநில செயலாளர் சார்நாத் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் குமாரராஜா, “தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தசரா திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மக்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய 5000 தொழிலாளர்கள் உள்பட 15 ஆயிரம் குடும்பங்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாகவும் அவர்களுக்கு கரோனா நிவாரண உதவியை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நூறாண்டு காலம் அதிமுகவை வெற்றி இயக்கமாக உருவாக்கிட உழைப்பேன் - முதலமைச்சர்!