கோவையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பீடம்பள்ளி பிரிவு அருகே இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது. அதில் பயணித்த இருவரில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினரின் விசாரணையில், உயிரிழந்தவர் சூலுார் அருகே சின்னக்குயிலி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பதும், மற்றொருவர் செல்வம் என்பதும், இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 06) ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிவரும்போது ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது என்றும் தெரியவந்தது.
இதற்கிடையில், உடற்கூராய்வு செய்யப்பட்ட தண்டபாணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி மீது மோதிய கார் குறித்து காவல் துறையினர் எந்த விசாரணையும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இறந்த தண்டபாணியின் உறவினர்கள் முயற்சிசெய்து விபத்து ஏற்படுத்திய காரை சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அடையாளம் கண்டனர்.
அந்தக் கார் இறந்துபோன தண்டபாணியின் ஊரான சின்னக்குயிலியைச் சேர்ந்தவரும் சுல்தான்பேட்டை தெற்கு ஒன்றிய அதிமுக மகளிர் அணிச் செயலாளருமான கமலவேணி என்பவரது மகன் பிரபுவுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.