மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புத்தாநத்தம் மருங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான செல்வராஜ் என்பவரது மனைவி சிட்டம்மாள் (வயது 30) என்பவர் ஒரு மனு அளித்தார். அதில், ”எனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால் புத்தாநத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
ஆனால் அதன் பின்னர் நான் மீண்டும் கர்ப்பம் அடைந்தேன். அப்போது புத்தாநத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தேன். அவர்கள் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டனர். இதன் பின்னர் நான் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தேன். அப்போது நான் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கருவை கலைத்துவிட்டேன்.
இதன் பின்னர் தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளேன். அதனால் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சிவராசு இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.