திருச்சி:பிரதமர் மோடி இன்று (செப்.24) 9 வந்தே பாரத் ரயில் (Vande Bharat Express train) சேவையை துவக்கி வைத்தார். அதன்படி, நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரயிலில் பயணம் செய்த மத்திய இணை அமைச்சர் முருகன், திருச்சி வரை பயணம் மேற்கொண்டார். பின்னர் திருச்சியில் கொடி அசைத்து ரயிலை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடு முழுவதும் 11 மாநிலங்கள் பயன் பெறும் வகையில், 9 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். அதில் ஒன்று, தென் தமிழக மக்கள் பயன் பெறும் வகையில், நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.
துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் திருச்சி மக்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டிருக்கும் இந்த ரயிலால், நெல்லையில் இருந்து மொத்தம் எட்டு மணி நேரத்தில் சென்னைக்கு சென்றடையலாம். அதிநவீன வசதி கொண்ட அதிவேக ரயிலாக, பிரதமர் மோடி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தபடி, ஏற்கனவே, சென்னை முதல் பெங்களூரு வழியாக, மைசூருக்கும், சென்னை முதல் கோவைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று சென்னைக்கு இயக்கப்படும் 2 ரயில்களில், தற்போது நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதன் வாயிலாக, ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிதி ஆண்டில் தமிழகத்துக்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.