தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு மட்டும் டிரஸ் கோடு ஏன்? - கனிமொழி எம்.பி.

திருச்சியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில், பெண்களின் உடை மீது குறை சொல்லக்கூடாது என்றும், ஆண்களை சரியாக வளர்க்க வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. கூறி உள்ளார்.

பெண்களுக்கு மட்டும் டிரஸ் கோடு ஏன்? - கனிமொழி எம்பி
பெண்களுக்கு மட்டும் டிரஸ் கோடு ஏன்? - கனிமொழி எம்பி

By

Published : May 7, 2023, 12:39 PM IST

கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷின் மேடைப்பேச்சு

திருச்சி: திருச்சி புனித சிலுவை பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று (மே 6) நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியனா பிரிட்ஜ் வரவேற்புரை வழங்கினார். அதேநேரம், சிறப்பு விருந்தினராக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், கடந்த கல்வியாண்டில் பல்கலைக்கழக தரவரிசை தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், கல்லூரியின் பல்வேறு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கும் கனிமொழி தங்கப்பதக்கம் வழங்கினார். இதனையடுத்து நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “நம்முடைய எம்.பி. கனிமொழி முன்பெல்லாம் நல்ல கவிதைகளை எழுதுவார்.

தற்போது வேலை அதிகமாக இருக்கின்ற காரணத்தால் அதனை நிறுத்திவிட்டார். அவரின் கவிதைகளுக்கென நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால், அவர் மீண்டும் கவிதைகளை எழுத வேண்டும். கருணாநிதி முதலமைச்சராக 1969ஆம் ஆண்டில் பொறுப்பேற்றதில் இருந்து, 1976ஆம் ஆண்டு வரை 68 கல்லூரிகளை உருவாக்கி இருக்கிறார்.

நான் காலையில் இருந்து மாலை வரை நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சோர்வடைந்து விட்டேன். ஆனால் அவர் டெல்லியில் இருந்து சென்னை வரை பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கருணாநிதியிடம் கற்றுக்கொண்டது அந்த உழைப்புதான் என நினைக்கிறேன்.

பெண்கள் என்று வரும்போது, உரிமைக்கான குரல் கொடுக்கின்ற முதல் பெண்மணியாக, ஒரு வீராங்கனையாக நம்முடைய எம்.பி. கனிமொழி இருக்கிறார். இந்த கிறிஸ்டியன் கல்லூரியில் நாங்கள் இஸ்லாமியர்களுக்கு மதிப்பு கொடுத்து அமைதியாக இருந்தோம். இதுதான் எங்களுடைய திராவிடக் கொள்கை” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, “கல்லூரி தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. இந்தியாவிலேயே பெண்களுக்கான ஓட்டுரிமை என்பது, பல நாடுகளில் பெண்கள் வாக்குரிமைக்காக மிகப்பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சிறைக்குச் செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

அடிக்கப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள். ஆனால், எந்தப் போராட்டமும் இல்லாமல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே திராவிட இயக்க வரலாற்றை தாங்கி இருக்கக் கூடிய நீதிக்கட்சி ஆட்சி ஏற்றுக் கொண்ட போதுதான் 1921ஆம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டு போடக்கூடிய உரிமை வழங்கப்பட்டது.

ஓட்டு போடக்கூடிய உரிமை வழங்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளிலே தொடங்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதில் மிகப்பெரிய மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். பெண்களுக்கு கல்வி அவசியமே இல்லை என்ற ஒரு காலகட்டம் இருந்தது.

இந்த கல்லூரியுடைய மாணவி கோமதி மாரிமுத்து பெற்றிருக்கக் கூடிய தங்கம் என்பது, நம்முடைய நாட்டை தலை நிமிர செய்திருக்கக் கூடிய பெருமை கொண்டிருக்கக் கூடிய ஒன்று. பரிசுகள் வாங்கி வந்த மாணவிகளிடம், என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள், என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்டேன்.

மிகப்பெரிய சாதனைகள் செய்யக் கூடிய மாணவிகள், அதற்குப் பிறகு காணாமல் போய் விடுவார்கள். எந்த வேலையிலும் இருக்க மாட்டார்கள். அதற்குப் பிறகும் படிப்பைத் தொடர மாட்டார்கள். கேட்டால் வீட்டில் விடவில்லை என்ற ஒரு பதில்தான் வரும். ஆனால், எனக்கு இன்று என்ன பெரிய சந்தோஷம் என்றால், நான் கேட்ட எந்த மாணவியும் ‘நான் சும்மா இருக்கிறேன். வீட்டில் இருக்கிறேன்” என்ற பதிலையே கூறவில்லை.

ஐஏஎஸ் அதிகாரியாக போகிறேன், ஒரு மாணவி நான் ராணுவத்தில் சேரப்போகிறேன், வேலை பார்த்துக் கொண்டி இருக்கிறேன் என்ற பதில்கள் மட்டும்தான் இன்று மேடையிலே நான் கேட்ட பதில்கள். அதுவே ஒரு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. மேலும், மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

நம்முடைய கனவுகளை பெண்கள் ரொம்ப சுலபமாக விட்டுக்கொடுத்து விடுகிறார்கள். நம்முடைய உழைப்பு, நம்முடைய தகுதி என்ன, நம்முடைய கனவு என்ன என்பதைப் பற்றி எல்லாம் நான் சிந்திக்காமல், அனைத்துக்கும் விட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். அது, அன்பை காட்டக் கூடிய ஒரு வழி என்று நினைத்துக்கொள்ள நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.

உங்களுடைய கனவுகளை நோக்கி நீங்கள் அந்தப் பாதையிலே செல்வதுதான், அடுத்த தலைமுறை பெண்களுக்கு நீங்கள் தரக் கூடிய ஒரு பரிசாக இருக்கும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. கல்லூரி முதல்வரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். நூறாண்டுகளாக இருக்கக் கூடிய ஒரு கல்லூரியில் டிரஸ் கோடு உண்டா என்று கேட்டேன்.

அதற்கு அவர், ‘ஆமா இருக்கிறது’ எனக் கூறினார். உங்கள் (மாணவிகள்) சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு நான் வைக்கக்கூடிய ஒரு வேண்டுகோள். அது ஏன் பெண்களுக்கு மட்டும் டிரஸ் கோட் இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண் எந்த உடையை உடுத்திக்கொண்டு இருந்தாலும், நீ (ஆண்கள்) சரியாக நடக்க வேண்டும். எங்களைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்.

இந்த பிள்ளைகள் தைரியமாக வளர வேண்டும். தந்தை பெரியார் சொன்னது அதுதான். உங்களுக்கு எது தடையாக இருந்தாலும், உங்களுடைய கனவுகளை நீங்கள் எட்டுவதற்கு, உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் தீர்மானிப்பதற்கு எது தடையாக இருந்தாலும், அது உங்களுடைய உடைகளாக இருந்தாலும் அதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும், மாற்றிக்கொள்ள வேண்டும்.

இங்கே இருக்கக் கூடிய மாணவிகள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் எந்த உடை அணிந்து இருந்தாலும் ஆண்கள்தான் சரியாகப் பார்க்க வேண்டும். ஆண்களை சரியாக வளர்க்க வேண்டும்” எனப் பேசினார். முன்னதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிக்கொண்டிருந்தபோது அருகே இருந்த மசூதியில் பாங்கு இசைக்கப்பட்டது. எனவே, உடனடியாக பேச்சை நிறுத்தி விட்டு அமைதியாக இருந்தார். தொடர்ந்து பாங்கு முடிந்த பிறகு, தனது பேச்சைத் தொடங்கினார்.

இதையும் படிங்க:செங்கல்பட்டில் போக்சோ வழக்கில் கைதான நபர் சிறையில் தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details