திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள 10 மாம்பழ குடோன்களில் மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அப்பகுதியில் இன்று (ஜூன்.12) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்காக ரசாயனம் தெளிப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள், பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 4 குடோன்களில் சுமார் 4 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் ரசாயனம் தெளிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அலுவலர்கள் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர். பின் அவற்றை அரியமங்கலம் குப்பை கிடங்கில் காவல்துறையினர், மாநகராட்சி ஆய்வாளர் முன்னிலையில் அழித்தனர்.
மேலும், உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி 3 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், முத்துராஜா, வசந்த், ஸ்டாலின் , ரெங்கநாதன் , ஜஸ்டின் , அன்புச்செல்வன், வடிவேலு, சண்முகசுந்தரம் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.