தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக வைகை அணை திகழ்கிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இரு போக நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மூல வைகையில் பெய்த மழையால் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து 63 அடி வரை உயர்ந்தது.
இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு போக சாகுபடிக்காக செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 900 கன அடி திறக்கப்பட்டது.
இதனால் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1872 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில் தொடர் நீர் வெளியேற்றம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மையால் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கி தற்போது 48அடியாக சரிந்தது.
நீர் மட்டம் குறைந்ததை அடுத்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டது.
எதிர்பார்த்த அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாததால் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கவும், மற்ற நாட்களில் தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 48.13அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 1,758 மி.கன அடியாகவும், நீர்வரத்து 918 கன அடியாகவும் இருக்கின்றது. மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69கன அடி நீர் வெளியேற்றப்படும் என அறியமுடிகிறது.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பாசன பகுதி நிலங்களின் சாகுபடி கேள்விக்குறியாகி விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.