திருப்பூர் அரசு மருத்துவமனையின் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் இன்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர், ஆக்ஸிஜன் தடைப்பட்ட காரணத்தால் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.
இந்த மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இருவர் உயிரிழந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை! எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் லட்சணம் இது! கரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.