தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 9, 2020, 1:59 PM IST

ETV Bharat / state

ஆசிரியர் பணி நியமன வழக்கு : குமரி முதன்மை கல்வி அலுவலருக்கு அபராதம்

மதுரை : குமரி ஆசிரியர் நிமயனம் குறித்த உத்தரவை அமல்படுத்தாது காலதாமதம் செய்த குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அபராதம் விதித்துள்ளது.

ஆசிரியல் பணி நியமன வழக்கு : குமரி முதன்மை கல்வி அலுவலருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!
ஆசிரியல் பணி நியமன வழக்கு : குமரி முதன்மை கல்வி அலுவலருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

கடந்த 2012 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் இயங்கிவரும் அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றின் சார்பில் ஆசிரியர் ரூபி என்பவருக்கு பணி நியமனம் அளிக்கக் கோரி மாவட்ட கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.

அந்த பரிந்துரைக்கு கல்வித்துறை அலுவலர்கள் பணி ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டதாக அறியமுடிகிறது.

இதனை எதிர்த்து ஆசிரியர் ரூபி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்துவந்த நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு மனுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டுமென கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவானது, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத குமரி மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், " நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவை எதிர்த்து 1069 நாள்கள் கழித்து, கால தாமதமாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என சொல்கிறார்கள். காரணம் கேட்டால், உத்தரவு நகல் கிடைக்கவில்லை என பதில் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இருப்பினும் அவை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என சாக்கு சொல்லப்படுகிறது.

அதை அலுவலர்கள் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை சரி பார்த்து உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இது குறித்து சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அனுப்ப வேண்டும்.

கல்வித் துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளின் நகல்கள் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டளவில் கல்வித் துறையில்தான் அதிகளவு வழக்குகள் பதிவாகி வருகின்றன. இதனை சரி செய்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்துறைக்கு என தனி சட்ட ஆலோசகர் நியமனம் செய்ய வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் கால தாமதம் செய்துவந்ததற்காக குழித்துறை மாவட்ட கல்வி அலுவலருக்கு 15 ஆயிரம் ரூபாயும், குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்

ABOUT THE AUTHOR

...view details