இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் காவல்நிலைய படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகும் கூட அது நின்றபாடில்லை. சட்டத்தை மதிக்காதவர்களின் செல்வாக்கு காவல் துறையில் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
திருட்டு வழக்கு ஒன்றில் சந்தேகத்தின் அடிப்படையில் நெய்வேலி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகன் கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவரை ரிமாண்ட் செய்யும்போது, அவர் துன்புறுத்தப்பட்டாரா , அவருக்குக் காயம் இருக்கிறதா என்று நீதிபதி கேட்டிருந்தால் நிச்சயம் இந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.
சாத்தான்குளம் சம்பவத்திலும் கூட நீதிபதி தன் கடமையைச் சரிவர செய்யவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதன் பின்னரும் கூட கீழமை நீதிமன்றங்களில் இத்தகைய போக்கு தொடர்வது நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இதைச் சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.