கிராம ஊராட்சிகளின் சாலை வசதியை மேம்படுத்தும் விதமாக கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி முகமை மூலமாக மேற்கொள்ளப்படும் இப்பணியில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. ஊராட்சிகளுக்கான திட்டம் என்பதால் புறநகரில் நடக்கும் சாலைப்பணியை மாவட்ட அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், சாலைகள் குறிப்பிட்டபடி அமைக்கப்படாமல் பெயருக்கு அமைக்கப்பட்டு பெரிய அளவில் முறைகேடு நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கூலம்பட்டியிலிருந்து புதுக்காமன்வாடி கிராமம் வரையில் கண்மாய்க்கரை வரை 5 கிலோ மீட்டர் தூரம் ரூ. 8.76 லட்சம் மதிப்பில் சில நாள்களுக்கு அமைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. 14ஆவது நிதிக்குழு மானியத்தின் மூலம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தகாரர் மூலம் தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.