இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (NEET) கட்டாயமாக வலிந்து திணித்த மத்திய அரசு அதற்கு கூறிய காரணம், ‘நாடு முழுவதும் வெவ்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்பதால் அந்தச் சுமையைக் குறைக்கிறோம்’ என்று தெரிவித்தது.
‘நீட்’ தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வரவைக் கிழித்து வீசி எறிந்து விட்டு, ‘நீட்’ கட்டாயம் என்பதில் மத்திய பாஜக அரசு விடாப்பிடியாக இருக்கின்றது.
அதேபோல மாநில அரசுகள் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளில் நடப்பு ஆண்டிலேயே தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரேயடியாக மறுத்து சமூகநீதி கோட்பாட்டிற்கு சமாதி கட்ட முனைந்துள்ளது.
ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 8 எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பிஜிஅய் உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்குத் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட மருத்துவக் கல்லூரிகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை (Institutes of National Importance - INI) என்று வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றின் மாணவர் சேர்க்கைக்குத் தனி நுழைவுத் தேர்வு என்றும், அந்தந்த மருத்துவ கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்றும் அறிவித்து இருக்கிறது.
மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வைத் திணித்து மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மாணவர்கள், கிராமப்புற பின்னணியில் உள்ள எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து விட்ட பாஜக அரசு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்லூரிகளுக்குத் தனியாக நுழைவுத் தேர்வு (Combined Entrance Test - CET) நடத்த முனைவது கண்டனத்துக்கு உரியது.
மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11 மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்குப் பொதுவான ‘நீட்’ தேர்வு பொருந்தாது; எனவே, தேவை இல்லை என்று முடிவெடுத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மட்டும் ‘நீட்’ நடத்துவது ஏன்?
மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மட்டும்தான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையா? தமிழ்நாட்டில் 355 ஆண்டுகளாக இயங்கி வரும் எம்.எம்.சி., முக்கியத்துவம் அற்றதா? மத்திய பாஜக அரசின் அளவுகோல் என்ன?
எனவே, இனி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வையே ரத்து செய்ய வேண்டும்; சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.