தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 29, 2020, 6:54 PM IST

ETV Bharat / state

அவதூறு பரப்பிய விவகாரம்: பிரபல பல் மருத்துவரை ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம்!

கிழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து, பிரபல பல் மருத்துவர் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சைபர் க்ரைம் வழக்கு : பிரபல பல் மருத்துவரை ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம்!
சைபர் க்ரைம் வழக்கு : பிரபல பல் மருத்துவரை ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம்!

சென்னை:கிழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து பிரபல பல் மருத்துவர் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவர்களான குணசீலன், பாலாஜி ஆகிய இருவரும், இந்திய பல் மருத்துவர்கள் ஆராய்ச்சி சங்கம், சர்வதேச பல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு, பார்சிலோனாவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர் குணசீலன் கலந்து கொண்டு நாடு திரும்பிய நிலையில், அவரது நெருங்கிய நண்பரான மருத்துவர் கிஷோர் நாயக் என்பவருக்கு வந்த மின்னஞ்சலில் அவரைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து மருத்துவர் குணசீலன் இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் இ-மெயிலை உருவாக்கிய டாக்டர் பாலாஜி மருத்துவமனையின் ஊழியர் ஜெயப்பிரகாஷ், டாக்டர் பாலாஜி ஆகியோர் மீது அவதூறு பரப்புதல், தவறான தகவலை பரப்பி மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் காவல்துறை விசாரணை நடத்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத்தொடர்ந்து, மருத்துவர் பாலாஜி, ஜெயபிரகாஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கடந்த 2018 ஆம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை எதிர்த்து மருத்துவர் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று(செப்.29) நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "மருத்துவர் பாலாஜி அந்த இ-மெயிலை அனுப்பவில்லை. தவறாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது" என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், "வழக்கில் முகாந்திரம் உள்ளது. உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது" என எடுத்துரைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளதாக, கீழமை நீதிமன்றம் கருதியதாலேயே அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. எனவே, மனுதாரர்கள் இருவரும் வரும் நவம்பர் 2ஆம் தேதி சைதாப்பேட்டை 11ஆவது மாஜிஸ்திரேட் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, சம்மனை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details