இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது.
அதில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் பேருந்துப் போக்குவரத்து சேவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று நவ. 11 முதல் 16ஆம் தேதிவரை கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே பொதுப்பேருந்து போக்குவரத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முதலமைச்சர், கர்நாடகா-தமிழ்நாட்டிற்கிடையே அரசு, தனியார் பேருந்து போக்குவரத்தினை தடையின்றி தொடர்ந்து இயக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
அதேபோல, தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துச் சேவையை தொடர பொதுமக்களிடமிருந்தும் தொடர்ந்து கோரிக்கைகள் வந்துகொண்டுள்ளன.
இக்கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, பணி நிமித்தமாக பொதுமக்கள் சென்றுவர ஏதுவாகவும், 16ஆம் தேதிக்கு பின்னரும் தமிழ்நாடு-கர்நாடகா இடையே அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவையைத் தொடர்ந்து இயக்குமாறு அரசு உத்தரவிடுகிறது.
பொதுப் பேருந்து சேவையைப் பயன்படுத்தும்போது, அரசு வெளியிட்டுள்ள நிலையான கரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.