நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் பங்கேற்றார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “மும்மொழி கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் பொது மக்கள் வரவேற்றுள்ளனர். பல மொழிகளை கற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக அதிமுக, திமுக கட்சிகள் விளங்க வேண்டும். தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மக்களிடம் மாவட்ட வாரியாக கருத்துக் கேட்பு கூட்டம் அல்லது வாக்கெடுப்பு நடத்தி மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். மூன்றாவது மொழி வேண்டாம் என்று எதிர்ப்பவர்களின் குடும்பத்தில் பெரும்பாலானோர் மூன்றாவது மொழியை அறிந்தவர்களாகவே உள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. மற்ற நோய்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.
மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக எழும் புகார்களை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்” என்றார்.