திருப்பூர்: அவிநாசியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்தியஸ்ரீ இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக (வரவேற்பாளர்) பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்ததுள்ளார் சத்தியஸ்ரீ.
அப்பொழுது அவரை சந்திக்க வந்த கடலூரைச் சேர்ந்த நரேந்திரன் என்ற வாலிபர், சத்தியஸ்ரீயுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்தியஸ்ரீ கழுத்தை அறுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சத்தியஸ்ரீயை, அப்பகுதியினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சத்தியஸ்ரீ மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கொலை செய்து தற்கொலை செய்ய முயற்சித்த நரேந்திரன், படுகாயங்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நரேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் கொலை செய்யப்பட்ட சத்யஸ்ரீ சமூக வலைத்தளம் மூலம் கடலூரை சேர்ந்த நரேந்திரன் என்பவரை காதலித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இருவரும் போன் மூலம் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சத்யஸ்ரீ, நரேந்திரன் உடன் பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரன் கடலூரில் இருந்து திருப்பூர் வந்துள்ளார். சத்தியஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பேசும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கோர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைதளம் மூலம் நீண்ட நாள் காதலித்த நிலையில், பேச மறுத்த காதலியை பட்டப்பக்லில் காதலன் கொலை செய்து, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "இதுக்கு மேல் பஸ் போகாது".. சிகரெட் பிடித்தபடி அசால்டாக பதில் சொன்ன ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ!