திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவருகிறது, நியூ மைக்ரோ ஃபைனான்ஸ் என்னும் நிதி நிறுவனம். பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ளது.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஆறு மாத காலத்திற்கான தவணைத் தொகையைக் கேட்டு வற்புறுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தினர், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களிடம் தவணைத்தொகை கேட்டு வருவதாகவும், தராத பெண்களிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி, பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்குப்போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு குவிந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.