திருப்பூர் - போயம்பாளையம் பிரிவு, நந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் கோவை - துடியலூர் பகுதியைச் சேர்ந்த அன்னபூரணிக்கும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 11 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சுரேஷின் ஊதியம் போதிய அளவில் இல்லாததால், பற்றாக்குறைக்கு அன்னபூரணியின் நகைகளை சுரேஷ் அடகுவைத்தாகத் தெரிகிறது.
இது தொடர்பாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய சுரேஷின் தாயார் அன்னபூரணியை அவரது தாய் வீட்டிற்கே அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சுரேஷ் அன்னபூரணியை விவாகரத்து செய்ய முயன்றதாகவும் தெரிகிறது. இதனையடுத்து தனது இரு குழந்தைகளுடன் கணவர் சுரேஷ் வீட்டிற்கு வந்த அன்னபூரணியை சுரேஷின் தாயார் உள்ளே விடாமல் கேட்டை பூட்டிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது இரு குழந்தைகளுடன் கணவர் வீட்டு வாசலிலேயே தர்ணா போராட்டத்தில் அமர்ந்து ஈடுபட ஆரம்பித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அவருக்குத் தெருவில் இருந்தவர்களும் ஆதரவு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட அன்னபூரணி தன்னை தனது கணவருடன் சேர்த்துவைக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் காவல் துறையினர், அன்னபூரணியிடம் விசாரணை மேற்கொண்டு அவரை மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அன்னபூரணி போராட்டத்தை கைவிட்டார். இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.