திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தண்டுக்காரான்பாளையத்தில் எட்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை மயக்க நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள், அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மேல் சிகிக்கைகாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஏழு நாட்களாக குழந்தை மயக்க நிலையில் உள்ளதால், சிறப்பு மருத்துவக் குழுவினர் குழந்தையை கண்காணித்து வருகின்றனர்.
தாயிடம் விசாரணை
இதனிடையே குழந்தையின் தாயை கண்டறிந்த சேவூர் காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சைலஜா குமாரி (காது தொண்டை மூக்கு மருத்துவர்) என்பதும் கணவருடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் தெரியவந்தது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பெற்றோர் வீட்டில் சைலஜா குமாரி வசித்து வந்த நிலையில், வேலை தேடி பேருந்தில் குழந்தையுடன் திருப்பூர் வந்தார். அப்போது தண்டுகாரன்பாளையத்தில் இறங்கிய அவர், குழந்தையுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து குழந்தைக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு அவரும் சாப்பிட்ட பிறகு குழந்தையை சாலையோரம் விட்டுச் சென்றது தெரியவந்தது.
அதன் பிறகு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சைலஜா அனுமதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.