திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக லாரியில் ஏற்றிவந்து கோழிக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள் உள்ளிட்டவைகளை அப்பகுதிகளில் கொட்டப்பட்டுவந்துள்ளது.
அந்தக் கழிவுகள் குப்பைக் கிடங்காக சேரவிடாமல் அதனை தீ வைத்தும் எரித்து வந்துள்ளனர். இதனால் அருகில் உள்ள நரசிங்காபுரம், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் வசிப்போருக்கு துர்நாற்றத்துடன், சுவாசக் கோளாறு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளது.
கோழிகழிவுகளை கொட்டவந்த லாரி ஓட்டுநரை போலிஸில் ஒப்படைப்பு! இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் எத்தனையோ முறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் காவலர்கள் எடுக்காததால் கோபத்தில் இருந்துவந்த மக்கள், இன்று அதிகாலையில் வழக்கம்போல் கழிவுகளை கொட்டவந்த லாரியை சிறைப்பிடித்தனர்.
பின் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநரை காவல்நிலையத்தில் மீண்டும் புகார் தெரிவித்து ஒப்படைத்தனர். இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.