கட்டுக்குள் கரோனா - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
திருப்பூர்: மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதால் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 308 ஆக உள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.
இந்நிலையில், இன்று (ஜூலை 14) திருப்பூர் - தாராபுரம் சாலையில் உள்ள உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது," திருப்பூர் மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாது காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருந்துக் கடைகள் மூலமாக காய்ச்சல் மருந்துகள் அதிகளவில் விற்பனையான பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது" என்று கூறினார்.