திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமராவதி அணை அமைந்துள்ளது. அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக மேற்கு தொடர்ச்சிமலைகளில் இருந்து வரும் சின்னாறு, பாம்பாறு, தேனாறு ஆகியவை உள்ளன.
அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் நேரடியாக 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. நிவர், புரெவி புயலின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில்கனமழை பெய்தது.
இதன் காரணமாக தேனாறு மற்றும் பாம்பாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் அமராவதி அணைக்கு வினாடிக்கு 7200 கன அடி நீர் வரத்து இருந்தது.
அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்றம்! இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் 88.10 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து பாதுகாப்பு கருதி 5 மதகுகள் வழியாக 3000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
உபரி நீர் வெளியேற்றப்படுவதால் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.