திருப்பூர்மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள காவுத்தம்பாளையம் ஊராட்சி, குமரிக்கல்பாளையம் கிராமத்தில் உலகிலேயே 45 அடி உயரமான நடுகல் உள்ளது. மேலும், இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள், இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானை முதுமக்கள் தாழிகள் புதைந்து கிடைந்ததை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். மேலும் கருப்பு, சிவப்பு ஓடுகள், கல் திட்டைகளும் அந்தப் பகுதியில் ஏராளமாக இருந்துள்ளன. ஒரு தோட்டத்துக்காரர் விவசாயப் பணிகளில் ஈடுபட்டபோது மனித எலும்புகளும் கிடைத்துள்ளன.
இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில், நடப்படும் நடுகல் உள்ளது என்பதால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ள திருவாரூர் மத்தியப் பல்கலை கழக கல்வெட்டியல், மரபு மேலாண்மை பட்டயப் படிப்பு பொறுப்பு ஆசிரியர் ச. ரவிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தலைமையில், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் ரவி கூறியதாவது, ''திருப்பூர் மாவட்டம், குமரிக்கல்பாளையம் பகுதியில் நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. உலகிலேயே 45 அடி உயர நடுகல் இங்கு இருப்பதால் நாகரிகப் பண்பாடு, வீரம் செறிந்த மக்கள் வாழ்ந்ததற்கான இடமாக இருந்துள்ளது. இங்கு ஒரு கி.மீ., சுற்றளவில் 10 கல் வட்டங்கள் கிடைத்துள்ளன. பண்டைய மனிதர்கள் வணங்கக்கூடிய இடமாகவும், இறந்தவர்களை வணங்கக்கூடிய பண்பாட்டினைப் பறைசாற்றும் வகையில், இறந்த மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டு கல் வட்டங்களாக வழிபடும் இடங்களாக இருந்துள்ளது.