திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போதுவரை 154 பேர் கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 108 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மாவட்டத்தில் நோய்த்தொற்று ஏற்பட்ட 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதுவரை 17 ஆயிரத்து, 263 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், இன்னும் ஆயிரத்து 26 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை.
ஆயிரத்து 77 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 52 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. மாவட்டம் முழுவதும் 12 தனிமைப்படுத்தப்படும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை 4ஆவது வார்டு பகுதியில் 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்களுக்குப் பொருள்களை வீட்டிலேயே வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், நாள்தோறும் அப்பகுதியில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதியில் மட்டும் 35 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வாணியம்பாடியில் சுகாதாரத் துறை, காவல் துறையினர் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொண்டனர்.
மாவட்டத்தில் மாதனூர் வட்டார மருத்துவ அலுவலர், வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர் (DEO), ஆம்பூர் பட்டாலியன் காவலர், ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் என தற்போதுவரை 154 பேருக்கு கரோனா தீநுண்மி உறுதிசெய்யப்பட்டுள்ளது.