திருப்பத்தூர்:கரோனா தொற்று காரணமாக தனது மகனின் உடல்நிலையை கவனிக்கவே தற்போது பரோல் வாங்கியுள்ளதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டியளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் பேரறிவாளன் 3ஆவது முறையாக 30 நாட்கள் பரோலில் இன்று வீட்டிற்குச் சென்றார். இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, “எனது மகனுக்கு சிறுநீரக தொற்றிற்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக அவன் சரிவர மருத்துவமனைக்கு செல்லவில்லை. மேலும், அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவு. அதனால் தான் அவனுக்கு மருத்துவம் பார்ப்பதற்க்கவே நான் 90 நாட்கள் பரோல் கேட்டிருந்தேன். ஆனால் 30 நாட்கள் தான் கிடைத்துள்ளது.
தண்டனை என்பது எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால், இவ்வழக்கில் மட்டும் நிர்ணயிக்கப்படாத தண்டனையாகவே உள்ளது. அரசு விடுதலை அறிவிக்கின்றது. அமைச்சரவையில், விடுதலை அறிவிக்கின்றனர். தனித்தனியாக ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் முடிந்தும் கையெழுத்து, ஆகவில்லை என்கிறார்கள். இச்சூழலில், ஏழு பேரில் ஒருவருக்குக் கூடவா விடுதலையாகுவதற்கு தகுதியில்லை என்ற கேள்வியெழுகிறது.