தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்!

திருப்பத்தூர்: ரூ.90 லட்சம் மதிப்பில் நவீன வேளாண் இயந்திரங்கள், ரூ.10 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி வீரமணி வழங்கினார்.

அமைச்சர் கேசி வீரமணி
அமைச்சர் கேசி வீரமணி

By

Published : Aug 31, 2020, 5:18 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன வேளாண் இயந்திரங்களும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரியில் இயங்கக்கூடிய சக்கர நாற்காலிகளும் என மொத்தம் 1 கோடி ரூபாய் மதிப்பில் அமைச்சர் கே.சி வீரமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேளாண் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய இவ்விழாவில், இயந்திரமயமாக்கலை அதிகரிக்கும் பொருட்டும், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், வேளாண் இயந்திர வாடகை மையம் தொடங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தினை சார்ந்த ஒன்பது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, வேளாண் பொறியியல் துறையின் 80% மானிய உதவியுடன் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் மொத்தம் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பானது தங்களுடைய ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை கொண்டு வேளாண் தொழிலாளர் படை அமைத்து, அதன் மூலம் வேளாண் இயந்திர வாடகை மையத்தை சிறப்பாக செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன வேளாண் இயந்திரங்கள்

இந்த மையத்திலிருந்து கிராமப்புறங்களில் விவசாயிகள் உழவு மேற்கொள்வதற்கும், நடவு செய்வதற்கும், களை எடுப்பதற்கும், மருந்து தெளிப்பதற்கும், அறுவடை செய்வதற்கான இயந்திரங்களை குறைந்த வாடகையில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி

இந்நிகழ்வில் பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி கூறுகையில், “பெண்களை நம்பி எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாக இருக்கும். இதை நாங்கள் நம்பியே இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாயத்தை மேம்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறோம். முதுகுத்தண்டு செயல்படாத 10 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான ஆட்டோமேட்டிக் சக்கர நாற்காலியை கொடுத்திருக்கின்றோம். நடமாடும் கோவிட்-19 பரிசோதனை வாகனத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். இதுபோன்ற மக்களுக்கு தேவையான எல்லா நன்மைகளையும் அதிமுக (அம்மா) அரசால் மட்டுமே செய்ய முடியும்” என்றார்.

அமைச்சர் கே.சி வீரமணி பேசிய காணொலி

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் ராமஜெயம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் அருண், வேளாண் செயற்பொறியாளர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரமேஷ், ஸ்ரீநிவாசன், உதவி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கரோனா நிவாரண கடன் வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details