திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி ஆகியோர் தலைமையில் நகராட்சி துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 13 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பொதுமக்களின் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஆம்பூரில் 100 விழுக்காடு கட்டுப்படுத்தபட்ட பகுதி என கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அது நடைமுறை படுத்தப்பட்டுள்ள நிலையில், வாணியம்பாடி பகுதியில் கரோனா தொற்றால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாகவும், பொதுமக்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளதாலும் இன்று முதல் வாணியம்பாடி முழுவதும் 100 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுத்தியா மாறும் திருப்பத்தூர் இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், வாணியம்பாடி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும், மறு உத்தரவு வரும் வரை அடைக்கப்படும். அனைத்து வங்கிகளும் இயங்காது. ஏடிஎம் மையங்கள் மட்டும் செயல்படும். ஒரு சில மருந்து கடைகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் உள்பட காய் கறி, மளிகை, பால், பழம், மருந்து வகைகள், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வாகனங்கள் மூலம் வீடு வீடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 180 தன்னார்வலர்கள் நியமிக்கப்ட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தினமும் 1,000 பேருக்குக் கரோனா பரிசோதனை நடத்த இலக்கு - விஜய கார்த்திகேயன்