தூத்துக்குடியை அடுத்த திரவியபுரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் பேசிய சரத்குமார், “கட்சி தொடங்கி 13 ஆண்டுகளில் பல வெற்றி தோல்விகளை பார்த்துவிட்டேன். திமுகவிலிருந்து வெளியேறிய நேரம் பாஜகவோடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே மறைந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்னை அழைத்து திருச்செந்தூரில் போட்டியிட செய்தார். அங்கு திட்டமிட்ட சதியால் நான் தோற்கடிக்கப்பட்டேன்.
இந்த தேர்தலில் சமக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்த பின்னரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றால் அவர்கள் நம்மை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். தேவைப்பட்டால் பயன்படுத்துவதும், தேவையில்லை எனில் தூக்கி எறியும் கறிவேப்பிலை போல நம்மை பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் வாக்கு வங்கி என்ன ? நமக்கான இடமென்ன என்பதை அறியவே தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தோம். மாற்றத்தை நோக்கி சிந்திக்கும் மக்கள், நல்லவர்கள் ஒன்று சேர மாட்டார்களா என யோசித்து கொண்டிருக்கின்றனர்.
அதை நிறைவேற்றும் பொருட்டாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கொள்கை ரீதியாக இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன. நமது கூட்டணியோடு இணைய மேலும் பல கட்சிகள் பேசி வருகின்றன. விரைவில் நல்ல செய்தியோடு பலமான கூட்டணியாக நமது மாறும். இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் போட்டியிடுவார்.