அசைவ உணவுகளில் மிகச்சிறந்த உணவு மீன் என்பார்கள். உடலுக்கு தேவையான வைட்டமின்களை நிறைவுற வழங்குவதில் மீன் உணவுகள் முன் வரிசையில் உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சிறியவர் முதல் பெரியவர்கள் வரையிலும் விரும்பி உண்ணப்படும் உணவு வகை பட்டியலில் மீன் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, கண் பார்வை, உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை வழங்குவதற்காக மீன் உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மீன்கள் பொதுவாக குழம்பாகவும், வறுவலாகவும் பரிமாறப்படுகின்றன. இதுதவிர கருவாடும் மீன் உணவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மீன்களை பதியமிட்டு வெயிலில் உலர்த்திய பின்னர் நெடு நாள்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்துவதுதான் கருவாடு. இவற்றில் நிறைய வகைகள் இருந்தாலும் மாசிக்கருவாடுக்கு சந்தைகளில் எப்போதுமே மவுசு அதிகம். இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் மாசி கருவாடு மிக பிரசித்தம்.
அந்நாடுகளில் மாசி கருவாடு இல்லாமல் உணவு பரிமாறப்படுவதில்லை என்ற வழக்கம் உண்டு. அந்த அளவுக்கு மாசி கருவாடு அங்குள்ளவர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் விருந்தினர் வீடுகளுக்கு செல்லும்போதுகூட மாசி கருவாட்டை விரும்பி வாங்கிச் செல்லும் வழக்கம் இருக்கிறது.
இதனால் இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தூத்துக்குடியிலிருந்து மாசி கருவாடு ஏற்றுமதி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. தினசரி டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த மாசி கருவாட்டின் ஏற்றுமதி தற்போது தடைபட்டுள்ளது. கருவாடு இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்திருப்பதே முக்கிய காரணமாக இதற்கு உள்ளது.
சமீபத்தில் உலகத்தையே அச்சுறுத்திய கரோனா தொற்று இலங்கையிலும் தன் கோரதாண்டவத்தை காட்டியது. இதனால் இலங்கை அரசு வெளிச்சந்தைகளில் மக்கள் கூடுவதற்கும், கருவாடு இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. எனவே தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டுவந்த மாசி கருவாடு ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு பொருள் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தென் தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரையுடைய மாவட்டமாகும். மற்ற கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமான கடற்கரை கிராமங்களை கொண்டுள்ள மாவட்டம் என்பதால் மாவட்டத்தின் பிரதான தொழில் மீன்பிடி தொழிலாகும்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் சார்ந்த தொழில்களும், நிறுவனங்களும் சற்று அதிகம். சமத்துவபுரம், அந்தோணியார்புரம், புதூர், தருவைகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாசிகருவாடு தயார் செய்யும் பணியில் சுமார் 15 நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 50 பணியாளர்கள் தினக்கூலிகளாக வேலை செய்துவருகின்றனர். காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் பணியானது மாலை 7 மணிவரை நீடிக்கிறது. ஆண்களுக்கு தினசரி கூலியாக 500 ரூபாயும், பெண்களுக்கு 350 ரூபாயும் வழங்கப்படுகிறது.