தூத்துக்குடி:வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் புதிதாக உருவாகியுள்ள 2 காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகத் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மழை வெள்ள நீருடன் கலந்த கழிவு நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாகத் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.
அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடியில் நேற்று இரவும் மழை தொடர்ந்தது.
நோய்த் தொற்று பரவும் அபாயம்
இந்த மழை விடிய விடியக் கொட்டி தீர்த்ததால் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பெரிய கடை தெரு, பெறைரா தெரு, மணல் தெரு, குமரன் நகர், மரக்குடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை வெள்ளத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
கூடுதலாக இப்பகுதியில் கழிவுநீர் ஓடை நிரம்பி மழைநீருடன் கலந்து நிற்பதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இதே நிலை
இங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது இதே நிலை வாடிக்கையாக நிலவுவதால் மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தருவதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை ஏற்கனவே புதுவகை கோவிட் வைரஸ் அச்சுறுத்தல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், கழிவு நீருடன் கலந்த வெள்ள நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்து நிற்பது மிகப்பெரும் தொற்று நோய் அபாயத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.
ஆகவே, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் இணைந்து இப்பகுதிகளில் அவசரகதியில் மீட்புப் பணிகளை முடுக்கி விட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பொதுவெளியில் திரையிடப்பட்ட 'ஜெய் பீம்'