தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டின் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார். அதற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தென் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வந்துள்ள தகவலைத் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மக்களை மீட்டெடுப்பதற்காக 87 மீட்கும் படை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அனைத்தும் தயாராக உள்ளதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.
மேலும் அவசர காலத்தில் உதவிடுவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் ஒவ்வொரு துறை சார்பிலும் தேவையான உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது என்றும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.