தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம், “தங்க மனசு திட்டத்தை” மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை வெளியிட்டார்.
இதையடுத்து தங்க மனது திட்டம் குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பல்வேறு இடங்களில் ஏழை-எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், விதவைகள், திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
இதற்கு அரசு இரண்டு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. நல்ல வீடு கட்டிக்கொள்ள கூடுதலாக தேவைப்படும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ரொக்கம் செலுத்த முடியாமல் வறுமை நிலையில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம், தங்க மனசு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சார்பில் நாட்டிலுள்ள வீடற்ற குடும்பங்களுக்கு அரசு மானியத்துடன் வீடுகள் கட்டித்தரும் பாரதப் பிரதமர் வீட்டு வசதித் திட்டம் மூலம் வீடற்ற வறிய குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டு, அவர்களது நிலஉடமை, குடியிருப்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
எனினும் அரசினால் வழங்கப்படும் மானியத் தொகை ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய், கழிப்பறை மானியம் 12 ஆயிரம் ரூபாய், ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் 20 ஆயிரம் ரூபாய் ஆக மொத்தம் 2 லட்சத்தி 2 ஆயிரம் ரூபாய்.
இந்தப் பணம் ஒரு வீடு கட்டிக்கொள்ள போதுமானதாக இல்லை என்பதால் உள்ளுரில் உள்ள புரவலர்கள் தாமாக முன்வந்து, இந்த வறிய பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குத் தேவைப்படும் கூடுதல் செலவினங்களை தமது பொறுப்பில் ஏற்றுக் கொள்ளும் திட்டமே தங்க மனசுத் திட்டம் .