தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவராஜா மற்றும் காவலர்கள் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே சாக்கு மூடைகளுடன் ஸ்கூட்டரில் வந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த பிரித்திவிராஜ்( 22) என்பதும், இதபோன்று, தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கடைகளுக்கும் மொத்த வியாபாரம் அடிப்படையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி ஓம் சக்தி நகர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் குடோன் அமைத்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருப்பதும், குறிஞ்சி நகரைச் சேர்ந்த மகாராஜன் மற்றும் கிருஷ்ணராஜா புரத்தை சேர்ந்த சோலையப்பன் ஆகியோருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.